மே 3ம் தேதி வரை லாக்-டவுனை நீட்டித்தது காலத்தின் தேவை கருதி வரவேற்கப்பட வேண்டியது என்று கூறிய காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதமர் ஏழைகளுக்கு தொழிலாளர்களுக்கு எந்த வித நிதியுதவியையும் அறிவிக்காது நைசாக நழுவி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இது போன்ற பொருளாதார முடக்கக் காலக்கட்டத்தில் பணப்புழக்கத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து மக்கள் கையில் பணப்புழக்கம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் பிரதமர் மோடி அரசுக்கு அறிவுரை வழங்கினார்கள், ஆனால் அவையெல்லாம் கேட்காத காதுகளில் ஓதப்பட்ட பாடங்களாகி விட்டது என்று ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி பிரபலமான ஆங்கில வழக்காறு ஒன்றைப் பிரயோகித்தார், அதாவது ஹேம்லெட் நாடகத்தை ஹேம்லெட் இல்லாமல் அரங்கேற்றினால் எப்படி இருக்கும் என்பது போல் பொருளாதார பின்னடைவுகளை ஏற்படுத்தும் லாக்-டவுன் நீட்டிப்பை நிதியுதவிகள் இல்லாமல் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என்று கிண்டல் செய்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ”மார்ச் 25ம் தேதி அறிவித்த சொற்ப நிதி பேக்கேஜ் அறிவிப்பைத் தாண்டி ஒரு பைசா கூட கூட்டப்படவில்லை, பணத்தேவை, புழக்கம் குறித்த முதல்வர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு பதிலும் இல்லை.
ரகுராம் ராஜன் முதல் ஜான் ட்ரீஸ் வரை, பிரபத் பட்னாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை யாருடைய ஆலோசனைகளும் காதுகளில் விழவில்லை.
ஏழை மக்கள் 21+ 19 நாட்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். பணம் உள்ளது, உணவும் உள்ளது, ஆனால் அரசு இரண்டையும் வெளியே விடாது” என்று ப.சிதம்பரம் ட்வீட்களில் சாடியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் சசி தரூர், லாக் டவுன் நீட்டிப்பை ஆதரிப்பதாகக் கூறினார் ஆனால் மக்கள் வாழ்வாதார அடிப்படைகளுக்கான நிவாரணம் அறிவித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.