இந்தியா

யாருடைய வாழ்வாதாரத்தையும் பறித்து விட வேண்டாம்: கரோனா லாக்-டவுன் காலக்கட்டத்தில் மக்களுக்கு பிரதமரின் ஏழு முக்கிய வேண்டுகோள்கள்

பிடிஐ

முழு அடைப்பு, அதாவது கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே மாதம் 3ம் தேதி வரை லாக்-டவுனை நீட்டித்த பிரதமர் மோடி 7 விஷயங்களை அனைவரும் பின்பற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதில் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமுள்ள முதியோர்களை கவனமாகப் பார்த்துக் கொள்வது வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது, லாக்-டவுனினால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் மற்றும் தேவைப்பாடு உள்ளவர்களை கவனித்துக் கொள்வது ஆகிய கோரிக்கைகள் அடங்குகிறது.

தேசத்துக்கு அவர் இன்று ஆற்றிய உரையில் “நாம் தொடர்ந்து பொறுமையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் கரோனா போன்ற கொள்ளை நோயையும் தோற்கடிக்க முடியும், இந்த நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடிப்படையில் 7 விஷயங்களை ஆதரிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

வயதானவர்கள் கரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

லாக்-டவுன், சமூக விலகல் என்ற லஷ்மணன் கோட்டைக் கடக்கக்கூடாது. அதே போல் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அவசியம் மறக்காமல் பயன்படுத்தவும்.

ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தும் நடைமுறைகளைக் கடைப்பிடித்து நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தவும். வெந்நீரையே குடிக்கவும்.

ஆரோக்கிய சேது ஆப்-ஐ டவுன்லோடு செய்து கரோனா தொற்று பரவலைத் தடுக்க உதவவும்.

உங்களால் முடிந்த ஏழைக்குடும்பங்களுக்கு உதவி புரிந்து அவர்களிடம் அக்கறைக் காட்டுங்கள். அவர்களது உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்யவும்.

உங்களுடன் பணியாற்றும் உங்கள் தொழிற்சாலை அல்லது உங்கள் வர்த்தகத்தில் உள்ள சக பணியாளர்கள், தொழிலாளர்களிடம் கருணை காட்டுங்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை பறித்து விடாதீர்கள்.

இறுதியாக கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் பெரிய பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு அதிகபட்ச மரியாதை கொடுங்கள்.

ஆகிய 7 கோரிக்கைகளை பிரதமர் மோடி தன் உரையில் முன் வைத்தார்.

SCROLL FOR NEXT