இந்தியா

ஐபிஎல் ஊழலில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு பயண ஆவணம் கொடுக்குமாறு பிரிட்டனுக்கு கோரிக்கை வைக்கவில்லை: மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்

பிடிஐ

ஐபிஎல் ஊழல் புகாரில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு வெளிநாடு செல்ல பயண ஆவணம் வழங்குமாறு பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார். ஆனாலும் அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

நேற்று காலையில் மாநிலங் களவை கூடியதும் ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரச்சினை எழுப்பினர்.

இதையடுத்து, “மத்திய அரசின் ஆணவப் போக்கால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் பதில் அளிக்காவிட்டால் அவையை சுமுகமாக நடத்தவிட மாட்டோம்” என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

இதுகுறித்த விவாதத்தை நீங்கள் தொடங்காதவரை பிரதமர் பதில் அளிக்க மாட்டார் என்று மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “இந்த விவகாரம் குறித்து ஆனந்த் சர்மா விவாதத்தை தொடங்கவில்லை என்றால், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தன் மீதான புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்து விவாதத்தை தொடங்குவார்” என்றார்.

இதற்கிடையே, அவையின் மையப் பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்த கோஷங்களுக்கு நடுவே பூஜ்ஜிய நேரத்தில் சுஷ்மா பேசும் போது, “என் மீதான குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கத் தயார் என்று நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளிலேயே அவைத்தலைவர் மூலம் தெரிவித்தேன். அவையில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வந்து அமர்கிறேன். ஆனால் எதிர்க்கட்சியினர் விவாதத்தை தொடங்காமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதார மற்றவை என்று இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். லலித் மோடிக்கு வெளிநாட்டு பயண ஆவணம் வழங்குமாறு பிரிட்டன் அரசிடம் நான் எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை” என்றார். தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் சுஷ்மாவால் தொடர்ந்து பேச முடியவில்லை. இதையடுத்து அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் கேள்வி நேரத்தின்போது (12 மணி) அவை கூடியபோதும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மாதம் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போதிலிருந்தே, லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடைபெறவில்லை.

சட்டவிரோத அறிக்கை

மாநிலங்களவைத் தலைவரிடம் காங்கிரஸ் ஒரு புகார் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், “பூஜ்ஜிய நேரத்தின்போது நோட்டீஸ் வழங்காமல் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தாமாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டவிரோதமான அறிக்கையை அவைக்குறிப்பில் பதிவு செய்யக் கூடாது” என்று கூறப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT