கரோனாவுக்கு முதன்முதலில் இலக்கானது கேரள மாநிலமாக இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பு, அரசின் துரிதமான நடவடிக்கை, கட்டுப்பாடுகளால் அங்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிகிச்சையில் பலனடைந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்றும் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 36 பேர் குணமடைந்த நிலையில், நேற்று 19 பேர் மீண்டனர். புதிதாக 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 278 ஆக இருக்கிறது. திங்கள்கிழமை குணமடைந்த 19 பேரில் 12 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், பத்தினம்திட்டா, திருச்சூர் மாவட்டத்தில் தலா 3 பேரும், கண்ணூரில் ஒருவரும் அடங்கும். மாறாக, கண்ணூரில் இருவரும், பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவரும் நேற்று கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
கேரள மாநிலத்தில் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது காசர்கோடு மாவட்டம். அங்கு 97 பேரும், கண்ணூரில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரு மாவட்டங்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காசர்கோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேரும், நேற்று 12 பேரும் குணமடைந்துள்ளனர். மொத்தம் 40 பேர் மீண்டுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், “கேரள மாநிலத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 378 ஆக இருக்கிறது. 19 பேர் திங்கள்கிழமை குணமடைந்தனர். 3 பேருக்கு கரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இரு நாட்களில் 55 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்னும் மாநிலத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 183 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 715 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 15,683 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. சராசரியாக நாள்தோறும் ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
கேரளாவில் நாளை (இன்று) புத்தாண்டான விஷூ பண்டிகைையை முன்னிட்டு மக்கள் பலரும் ஊரடங்கை மதிக்காமல் வெளியே வருகிறார்கள். இப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். வைரஸ் எங்கிருந்து மீண்டெழும் எனக் கணிக்க முடியாது. மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பரவல் இருக்கும் அச்சத்தால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், “கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கை மாநிலத்தில் தொடரும். அண்டை மாநிலங்களில் இன்னும் பாதிப்பு குறையவில்லை என்பதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப் போவதில்லை. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அதுதான் இலக்கு. எங்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் நல்ல பலன் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.