இந்தியா

நண்பனை சூட்கேசில் அடைத்து வீட்டுக்கு அழைத்து சென்ற மாணவர்

செய்திப்பிரிவு

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பால்மட்டா பகுதியில் உள்ள ஆர்ய சமாஜ் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த குடியிருப்புக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 16 வயது மாணவர் குடும்பத்துடன் வசிக்கிறார். தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வர குடியிருப்பு நிர்வாகிகளிடம் மாணவர் அனுமதி கோரினார். அவர்கள் அனுமதி வழங்கவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாணவர் தனது ஸ்கூட்டரில் வெளியே சென்றார். அப்போது ஸ்கூட்டரில் ஒரு பெரிய சூட்கேஸை எடுத்துச் சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பிய மாணவர், சூட்கேஸை இழுத்துச் சென்றார்.

காலை 8.30 மணிக்கு மாணவரும் அவரது நண்பரும் குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். புதிய நபரை பார்த்த வாயில் காவலர்கள், குடியிருப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து மங்களூரு கிழக்கு பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் நள்ளிரவில் தனது நண்பரை சூட்கேசில் அடைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக மாணவர் வாக்குமூலம் அளித்தார். இருவரும் சிறார் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT