இந்தியா

டெல்லி மாநாட்டுக்கு வந்த தமிழர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

டெல்லி மாநாட்டுக்கு வந்த தமிழர்களில் நான்காவதாக ரிஜ்வான் அகமது (57) என்பவர் நேற்று மரணம் அடைந்தார். திண்டுக்கல், ஆர்.வி.நகரை சேர்ந்த இவருக்கு மனைவி உள்ளார்.

கடந்த மாதம் முதல் வாரத்தில், 40 நாட்களுக்கான ஜமாத் பிரச்சாரத்துக்கு ரிஜ்வான் புறப்பட்டார். நாட்டின் பல்வேறு இடங்களில் மசூதிகளில் தங்கி, ஜமாத் பிரச்சாரத்துக்கு பிறகு டெல்லி, தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வந்துள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி, ரிஜ்வான் இன்று திண்டுக்கல் திரும்புவதாக இருந்தார். ஆனால் கரோனா சிக்கல் காரணமாக, டெல்லியில் தப்லீக் ஜமாத் தலைமையகமான மர்கஸில் சிக்கியுள்ளார். மர்கஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மறுநாள் தாம் மற்ற சில முஸ்லிம்களுடன் டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிஜ்வான் தனது மனைவியிடம் போனில் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ரிஜ்வான் டெல்லி, லோக்நாயக் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்தகவல் அவரது வீட்டாருக்கு திண்டுக்கல்லில் உள்ள தப்லீக் ஜமாத் கிளை மூலமாக கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ரிஜ்வான் சிகிச்சை பலனின்றி இறந்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அவரது உறவினர், கலீலுல் ரஹ்மான் தொலைபேசியில் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் இறந்த அவரது உடலை டெல்லியிலேயே நல்லடக்கம் செய்து விட விரும்புகிறோம். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் மூலமாக ரிஜ்வானின் மனைவி முஸ்திரி பானு கடிதம் அளித்து விட்டார்” என்றார்.

மாநாட்டில் பங்கேற்ற 3 தமிழர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT