உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு அண்மையில் ‘ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டது. இதனை ஆண்டிராய்ட், ஐ போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
நாம் வசிக்கும் இடத்தின் அருகேகரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதிகளை செயலி சுட்டிக் காட்டும். பாதிப்புள்ள இடத்தின் தொலைவை செயலி துல்லியமாக காட்டும். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களை சந்திப்பதை தவிர்க்க முடியும். மேலும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த அறிவுரைகளும் செயலி மூலம் வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி அழைப்பு
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். பிரதமர் கூறும்போது, ‘‘உங்கள் பகுதியில் யாராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் செயலி அடையாளம் காட்டும். பல்வேறு மாநிலங்களின் உதவி எண்களும் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
பிரதமரின் அழைப்பை தொடர்ந்து கடந்த இரு வாரங்களில் மட்டும் சுமார் ஒரு கோடிபேர், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
உலக வங்கி சார்பில் ‘தெற்குபொருளாதார பார்வை' என்றதலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், "கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். அந்தவகையில் இந்தியா வடிவமைத்துள்ள ஆரோக்கிய சேது செயலிமுன்னுதாரணமாக, வழிகாட்டியாக உள்ளது" என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ஐ.நா. பாராட்டு
ஐ.நா. சபையின் உறைவிட ஒருங்கிணைப்பாளர் ரெனடா கூறும்போது, "கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியாவில் முன்கூட்டியே ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர்நரேந்திர மோடியை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார். உலகசுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஹெங்க் பெகடம் கூறும்போது, "கரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிரமிப்பூட்டுவதாக உள்ளன" என்றார்.