தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா : கோப்புப்படம் 
இந்தியா

கரோனா யுத்தம்: ஊதியத்தில் 30 சதவீதத்தை ஓராண்டு குறைக்க தாமாக முன்வந்த தலைமைத் தேர்தல் ஆணையர், ஆணையர்கள் 

பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் போராடி வரும் நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மற்ற இரு ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் தங்கள் அடிப்படை ஊதியத்திலிருந்து 30 சதவீதத்தை ஓராண்டுக்கு குறைத்துக்கொள்ள தாமாக முன்வந்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர்கள், மற்ற இரு ஆணையர்களின் ஊதியம் என்பது, உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஊதியத்துக்கு இணையானதாகும். உச்ச நீதிமன்ற நீதிபதி மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெறுகிறார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இப்போதுள்ள சூழலில் உலகின் பல நாடுகளிலும், நம் நாட்டிலும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசுக்கு சமூக நல அமைப்புகள், எம்.பி.க்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள்.

ஆதலால், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட 3 ஆணையர்களும் தங்களின் அடிப்படை ஊதியத்திலிருந்து 30 சதவீதத்தை அடுத்த ஓராண்டுக்கு குறைத்துப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, எம்.பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரும் தங்கள் ஊதியத்தைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT