மத்திய அமைச்சர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வந்து தங்கள் பணியை இன்று கவனிக்கத் தொடங்கினர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்தது. 14-ம் தேதியான நாளை முழு அடைப்பு காலம் முடிகிறது. ஆனால், இந்தியாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சில மாநிலங்களில் வரும் 30-ம் தேதி வரை முழு அடைப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
மத்திய அரசைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் இடங்களில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவருவதோடு, ஊரடங்கு நீட்டிக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாமல் சில நடவடிக்கைசகள் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.
இதன் முதல்கட்டமாக அனைத்து அமைச்சர்கள், இணைச்செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், அனைவரும் இன்று முதல் அலுவலகத்துக்கு வந்துபணி தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்தே பணி என்ற நிலையில் இருந்து மாறி நேரடியாக அலுவலகம் வந்துள்ளனர்.
பல்வேறு மத்திய அமைச்சர்களும் நேரடியாக அலுவலகங்களுக்கு வந்து தங்கள் பணியை இன்று கவனிக்கத் தொடங்கினர்.
அதுமட்டுமல்லாமல் அரசு சார்பில் வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வழக்கம்போல் வந்துள்ளனர்.