கோவிட்-19 பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தினால்தான் லாக்-டவுன் நீட்டிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் இதுவரை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 9,152 என்றும், வைரஸ் தொற்றுநோயால் 308 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவிததுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. லாக் டவுன் தொடங்கி 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில், லாக் டவுன் நீட்டிப்பு தொடர்பாக இன்று பிரதமர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களிடம் பலகட்ட விவாதங்களை நடத்தினார்.
நாடு தழுவிய லாக் டவுன் நீட்டிப்பு குறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது:
''கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பாக மேலும் பல பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான நிலைமையை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
மக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் சரியாக கிடைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நாடு தழுவிய லாக் டவுன் நீட்டிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்.
மேலும், பண நெருக்கடி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, நகர, கிராம மட்டத்திலும் வங்கிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்''.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.