சிறுபான்மையினருக்கு எதிரான பொய்ச் செய்திகள் மீது உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தப்லீக் ஜமாத்தினரின் இஸ்திமா மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டவராலும் கரோனா பரவல் அதிகமாகி உள்ளது. இந்தச் சூழலில் இந்தப் பரவலுக்கு மதச்சாயம் பூசும் வகையில் சமூக விரோதிகள் சிலர், தப்லீக் ஜமாத்தினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற பொய்ச் செய்திகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. எனவே, பொய்ச் செய்திகள் மற்றும் வதந்திகள் விவகாரத்தில் உ.பி.யில் மாவட்ட மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் (எஸ்எஸ்பிக்கள்) அதிக கவனம் எடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதக்கலவரம் அதிகம் நடந்த வரலாற்றைத் தாங்கியுள்ள உ.பி.யில் அவை மீண்டும் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலில் தமிழர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பதும் பாராட்டத்தக்கதாக உள்ளது.
அலிகரின் டெல்லி கேட் பகுதியில் பழங்கள் விற்கும் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு வெளியானது. இதில், இந்து வியாபாரிகளின் தோள்களில் ‘ஜெய்ஸ்ரீராம்’என எழுதப்பட்ட துண்டுகள் கிடந்தன. இவர்கள் கடைகளில் மட்டும் இந்துக்கள் பழம் வாங்கி முஸ்லிம் கடைகளைத் தவிர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள், பழங்களில் எச்சில் துப்பி கரோனாவைப் பரப்புவதாகவும் புகார் கூறப்பட்டது.
வைரலான இந்தப் பதிவுக்குக் காரணமான பஜ்ரங்தளம் அமைப்பினர் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார் தமிழரான எஸ்எஸ்பி ஜி.முனிராஜ்.
அகில இந்திய இந்து மகா சபையின் அலிகர் தலைவர் பூஜா சகூன் பாண்டே, அவரது கணவர் அசோக் பாண்டே ஆகிய இருவரும் பேசிய வீடியோ பதிவு ஒன்றும் வைரலானது. அதில் இருவரும், கரோனா பாதித்த முஸ்லிம்களை சுட்டுத்தள்ள வேண்டும் எனக் கூறியிருந்தனர். இருவரையும் உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளி விட்டார் முனிராஜ் ஐபிஎஸ்.
மதரஸாக்கள் அதிகம் உள்ள சஹரான்பூரில் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தினர், முட்டை, கோழி பிரியாணி என அசைவ உணவு கேட்டதாகவும் இது தொடர்பாக மருத்துவப் பணியாளர்கள் புகார் அளித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
இந்தச் செய்தியின் மீது மற்றொரு தமிழரான மாவட்ட எஸ்எஸ்பி பி.தினேஷ்குமார் ஐபிஎஸ் நேரடியாகக் களமிறங்கி விசாரித்துள்ளார். அதில் ஜமாத்தார் மீதான தகவல் தவறானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அவ்வாறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என எஸ்எஸ்பியான தினேஷ்குமார் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதற்காக அதிகாரி தினேஷைப் பாராட்டி அவரது ட்விட்டர் தளத்தில் பொதுமக்கள் பாராட்டுகளைப் பதிவிட்டுள்ளனர்.
உ.பி.யின் கவுதமபுத்தர் நகர் மாவட்டத்தில் வாட்ஸ் அப்பில் மதக்கலவரத்தை தூண்ட முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக ஆசிப், பொய் வீடியோக்களை பரப்பியதாக ‘ஹிந்த்’என்ற வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகிகளான யூசுப்கான், பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளை, நொய்டாவின் துணை ஆணையர்கள் ஹரிஷ்சந்தர், சங்கல்ப் சர்மா ஆகியோர் இந்த நடவடிக்கை எடுத்தனர்.
பெரோஸாபாத்தில் முஸ்லிம்கள் பகுதியில் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு வந்த ஆம்புலன்ஸ் கல்லெறிந்து விரட்டப்பட்டதாக இந்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. இது தவறானது என மாவட்ட காவல்துறை உறுதிசெய்து ட்விட்டரில் மறுப்பு வெளியிட்டது. இதுபோல், பல்வேறு மாவட்டங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.