சயன்ஸ் என்ற இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையின்படி ரெம்டெசிவைர் (remdesivir) என்ற புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்து கோவிட்-19-க்கு எதிராக நல்ல பலன் அறிகுறிகளைக் காட்டி வருகிறது.
இது வைரஸ் இரட்டிப்பாவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சார்ஸ் கோவ்-2 என்ற வைரஸ் ஆர்.என்.ஏ-வின் ஒரு இழையே. இது இரட்டிப்பாவதற்கு இது ஒட்டுண்ணியாகச் செயல்பட வேறு ஒன்று தேவை, இந்நிலையில் விஞ்ஞானிகள் ஆர்.என்.ஏ-வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் (RDRp) என்ற செயல்பாங்கிலுள்ள இடத்தைக் கண்டுப்பிடித்துள்ளனர், இதற்கும் போலியோ வைரஸ், ஹெபடைடிஸ் சி வைரசுக்கும் ஒற்றுமைகள் வலுவாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆர்டிஆர்பியில் வேலை செய்யும் மருந்து நுவல் கரோனா வைரஸுக்கும் வேலை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆர்.என்.ஏ.வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் என்பதுதான் ஆர்.என்.ஏ. இழைகளை உருவாக்கும் எந்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ரெம்டெசிவைர் என்ற இந்த மருந்து அதனுடன் எந்த இடத்தில் சரியாகப் பிணையும் என்பதையும் விஞ்ஞானிகள் அடையாளம் காட்டியுள்ளனர். ரெம்டெசிவைர் என்ற இந்த மருந்து வைரஸ்கள் இரட்டிப்பாவதைத் தடுக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். இதற்கு nucleotide analogue என்று பெயர். இது ஆர்.என்.ஏ. சங்கியியுடன் பிணைந்து செயல்படும் போது வைரஸ் தான் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறோம் என்ற மாயையை உருவாக்கும் ஆனால் உண்மையில் வைரஸ் இரட்டிப்பாகாது, இதன் மூலம் இரட்டிப்பாவதைத் தடுக்கிறது.
“Structure of the RNA-dependent RNA polymerase (RDRp) from COVID-19 virus” என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கட்டுரையில் ஆராய்சியாளர்கள் கரோனா வைரஸ் என்கிற கோவிட்-19 வைரஸுக்கும் RDRpkகும், ரெம்டெசிவைர் மருந்துக்கும் இடையே நடக்கும் உயிர்பவுதிக மற்றும் மூலக்கூறு ஊடாட்டங்களை விவரித்துள்ளனர்.
ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் என்பதுதான் இரட்டிப்பாகும் தன்மை கொண்டது. மருந்து செலுத்தப்பட்டால் வைரஸ் இரட்டிப்பாவது தடுக்கப்படும். இதனால் நோய் எதிர்ப்பாற்றல் மீதான சுமையும் குறையும். மேலும் கரோனா வைரஸினால் ஆபத்தான கட்டத்துக்கு நோயாளிகள் செல்வதையும் தடுக்க முடியும், என்கிறார் அமைப்பியல் உயிரியல்வாதி வி.தனசேகரன். சோஃபோஸ்புவைர் (sofosbuvir) மற்றும் ரெம்டெசிவைர் ஆகிய மருந்துகள் நம்பிக்கை அளிக்கின்றன என்று கூறும் வி.தனசேகரன் சோஃபோஸ்புவைர் ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஹெபடைட்டிஸ் சி நோய் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இப்போதைக்கு அமெரிக்க பார்மா நிறுவனம் ஜீலீட் சயன்சஸ் தயாரித்து வரும் ரெம்டெசிவைர் இந்தியாவில் கிடைக்கவில்லை. உலகம் முழுதும் 16 லட்சத்துக்கும் அதிகமானோர் 213 நாடுகளில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையிலும் மரண எண்ணிக்கை 99,690 என்று ஒருலட்சத்தை நெருங்குவதாலும் ரெம்டெசிவைர் தற்போது கடவுளாகக் காட்சி தருகிறது என்று விஞ்ஞானிகள் நம்பைக்கை தெரிவித்துள்ளனர்.
-தி இந்து ஆங்கிலம்
தமிழில் சுருக்கமாக: இரா.முத்துக்குமார்