ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தைக்கு ஒட்டகப்பால் தேவை என்று மும்பையைச் சேர்ந்த பெண், பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட் செய்ததையடுத்து, ராஜஸ்தானிலிருந்து 30 லி்ட்டர் ஒட்டகப்பாலை ரயில்வே துறை மும்பை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் சேர்த்தது.
ரயில்வே துறையின் வர்த்தக நோக்கமற்ற இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி எனும் பெண் ஒருவர் பிரதமர் மோடியின் ட்விட்டரில் டேக் செய்து ட்வீட் செய்தார். அதில் “ சார், எனக்கு 3.5 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கிறான். அவனுக்கு பசுவின் பால், ஆட்டுப்பால், எருமைப்பால் என எது கொடுத்தாலும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவான்.
அவனுக்கு தொடர்ந்து ஒட்டகப்பால் மட்டுமே வழங்கி வருகிறேன். தற்போது லாக்டவுன் நீடிப்பதால், என்னிடம் ஒட்டகப்பால் போதுமான அளவு இருப்பு இல்லை, என் குழந்தைக்கு ராஜஸ்தான் சாத்ரி நகரிலிருந்து ஒட்டகப்பால், அல்லது பால்பவுடர் கிடைக்க உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவி்த்திருந்தார்.
ரேணு குமாரியின் ட்விட்டைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த குழந்தைக்கு பால் கிடைக்க பல்வேறு ஆலோசனைகள் தெரிவி்த்தார்கள். நாட்டிலேயே முதல்தரமான ஒட்டகப்பால் பொருட்களை தயாரிக்கும் அத்விக் நிறுவனம் கூட குழந்தைக்கு பாலை இலவசமாக வழங்க முன்வந்தது, ஆனால் லாக்டவுனில் அனுப்புவது சாத்தியமா என்று கேட்டது
இந்த ட்வீட்டைப் பார்த்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா அந்த பெண்ணின் குழந்தைக்கு ஒட்டகப்பால் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதுகுறித்து வடமேற்கு ரயில்வே போக்குவரத்து மேலாளர் தருண் ஜெயின் அளித்த பேட்டியில், “ ஐபிஎஸ் அதிகாரி போத்ரா மூலம் இந்த விவகாரம் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக நான் அஜ்மீரில் உள்ள மண்டல ரயில்வே மேலாளர் மகேஷ் சந்த் ஜீவாலியாவைத் தொடர்ப்பு கொண்டு பேசினேன்.
இதையடுத்து, பஞ்சாப் லூதியானாவிலிருந்து மும்பை பாந்த்ராவுக்கு செல்லும் சரக்கு ரயில் 00902 என்ற ரயிலை ராஜஸ்தானின் பால்னா ரயில்நிலையத்தில் நிறுத்த திட்டமிட்டோம். அந்த ரயில்நிலையத்துக்கு 20 லி்ட்டர் ஒட்டகப்பாலை கொண்டுவரச் செய்து பேக்கிங் செய்து மும்பைக்கு அனுப்பி வைத்தோம். இதற்காக பால்னா ரயில்நிலையத்தில் ரயிலை சிறப்பு அனுமதி பெற்று நிறுத்தினோம்.
லாபம் சம்பாதிக்க, வர்த்தகம் செய்ய இது உகந்த நேரம் அல்ல, மனித நேயம்தான் முக்கியம். 18 மாவட்டங்களைக் கடந்து ரயில்வே ஒரு குழந்தைக்கு உதவியுள்ளது” எனத் தெரிவித்தார்
இந்த சம்பவம் குறித்து பதில் அளித்து ஐபிஎஸ் அதிகாரி போத்ரா ட்வீட் செய்திருந்தார். அதில், “20 லிட்டர் ஒட்டகப்பால் நேற்று இரவு அந்த பெண்ணின் குழந்தைக்கு வழங்கப்பட்டது. அந்த குடும்பத்தினர் நன்றியுடன் பாலைப் பெற்றுக்கொண்டனர். வடமேற்கு ரயில்வேக்கு நன்றி” எனத் தெரிவி்த்தார். ரயில்வ துறையின் உதவியை நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.