லாக் டவுன் காரணத்தால் ஆத்திரத்தில் கைவண்டிகளுக்குத் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 80 பேரை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இதனை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கரோனா வைரஸ் பலி கொண்டுள்ளது. இந்தக் கொடிய வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ள நிலையில் கோவிட்-19யின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 24-ம் தேதி லாக் டவுன் அறிவிக்கட்டது. திடீர் அறிவிப்பினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பல்வேறு வாகனங்களில் சொந்த ஊரை நோக்கிச் சென்றனர்.
வாகனத்தில் செல்ல இயலாத பலரும் நெடுஞ்சாலைகளில் நடந்தே சென்றனர். ஊர் செல்லமுடியாத பல புலம்பெயர் தொழிலாளர்களும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனினும் இவர்களுக்குத் தொண்டுநிறுவனங்களும் அரசு நிர்வாகங்களும் ஓரளவு முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன.
லாக் டவுன் காரணமாக குஜராத்தில் உள்ள சூரத் நகரில் சிக்கிக்கொண்ட ஒடிசாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றிரவு லக்ஸானா பகுதியில் தாங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஆத்திரமடைந்து டயர்களுக்குத் தீ வைத்ததோடு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான சுமையுந்து கை இழுவை வண்டிகளுக்கும் தீ வைத்தனர்.
இதுகுறித்து காவல் உதவி ஆணையர் கே. பட்டேல் கூறியதாவது:
''இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதியில் காவல்துறைப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஒடிசாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரி வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தங்களுக்கு வழங்கிய உணவு சுவையற்றது என்றும் அவர்கள் உணவைப் பெற வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறினர்.
கோபத்தால், அவர்கள் லஸ்கானா பகுதியில் சில கைவண்டிகள் மற்றும் டயர்களை எரித்தனர். இது தொடர்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 80 பேரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளோம். கடுமையான அளவில் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 30-ம் தேதி அன்று நடைபெற்ற இதேபோன்ற ஒரு சம்பவத்தில், சூரத் நகரில் 90க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய லாக் டவுனை மீறி, இதேபோன்ற பிரச்சினையில் போலீஸாரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டனர்''.
இவ்வாறு காவல் உதவி ஆணையர் தெரிவித்தார்.
இந்தியாவில் 6500க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் ஒரே நாளில் 40 பேர் பலியாகக் காரணமாக இருந்துள்ளது.
குஜராத்தில் வியாழக்கிழமை இரவு முதல் புதிதாக 116 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.