செய்தியாளர்களிடம் பேசும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

கோவிட்-19 பரவல் அதிகரிக்கும் சூழ்நிலையைப் பொறுத்து லாக் டவுன் நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் பேட்டி

ஏஎன்ஐ

லாக் டவுன் நீட்டிக்கப்படுவது மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 பரவல் நிலைமையைப் பொறுத்தது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை 6,412 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இன்று தெரிவித்துள்ளது. ஜார்க்கண்டில் இதுவரை 13 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14-ம் தேதி வரை லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பொதுத்துறைகள், பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல சிறு வியாபாரிகளும், பல்வேறு தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வருமானம் இழந்த நிலையில் பலருக்கும் இழப்பீடுகள் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் லாக் டவுன் இன்னும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த, விவரம் அறிந்த பலரின் கோரிக்கையாக உள்ளது. இதனை பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமரின் காணொலிக் கூட்டங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கோவிட்-19 நெருக்கடி குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டிய முதல்வர் ஹேமந்த் சோரன், லாக் டவுன் நீட்டிப்பு என்பது மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையைப் பொறுத்தது என்று கூறினார்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மற்ற மாநிலங்கள் எங்களிடமிருந்து வேறுபட்ட சூழ்நிலையைக் கொண்டுள்ளன. ஜார்க்கண்டில் இருந்து சென்ற ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் வேலை இழந்து ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி உதவி கேட்டுள்ளோம். கரோனா வைரஸின் தீவிரத் தன்மையை உணராமல் சிலர் கோவிட்-19 தொற்றுநோயை அவர்கள் அறியாமலே பரவும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. அதன் பரவல் வேகத்தைப் பொறுத்து லாக் டவுன் தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்''.

இவ்வாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT