கரோனா வைரஸ் தொற்றை பரப்புவதாக கூறி 2 பெண் மருத்துவர்களை தாக்கிய நபரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் பணியாற்றி வரும் உள்ளுறை பெண் மருத்துவர்கள் இருவர், கவுதம் நகர் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு பழங்கள் வாங்க தங்கள் பகுதியில் உள்ள பழக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் 42 வயது நபர் ஒருவர், பழக்கடையை விட்டு வெளியே செல்லுமாறு பெண் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். கரோனா வைரஸ் தொற்றை மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து இங்கு பரப்புகிறீர்கள் என்றும் அவர் சத்தம் போட்டுள்ளார். இதற்கு எதிராக மருத்துவர்கள் பேச முயன்றபோது, அவர்களின் கைகளை முறுக்கி, பின்னால் தள்ளியுள்ளார். பிறகு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இது தொடர்பாக பெண் மருத்துவர்கள் இருவரும் ஹவுஸ்காஸ் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.
இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இளநிலை மருத்துவர்கள் இருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். வழியில் ரோந்து பணியில் இருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அடையாள அட்டையை காட்டிய பிறகும் போலீஸார் தங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் தாக்கியதாகவும் இருவரும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநருக்கு உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.