சீல் வக்கப்பட்ட வருண் விஹார் என்களேவ் குடியிருப்பு வளாகத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மருத்துவர்கள் ஏஎன்ஐயிடம் பேசும் காட்சி | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

மருத்துவர்களுக்கும் வெளியே செல்ல அனுமதி மறுப்பு: உ.பியில்  கரோனா பாதிக்கப்பட்ட பகுதி சீல் வைப்பு 

ஏஎன்ஐ

கரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாகக் கருதப்படும் குடியிருப்பு வளாகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் டெல்லி அருகே நடந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இதுவரை 5 ஆயிரத்தையும் கடந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இதுவரை 361 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 27 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகள் சீல்வைக்கப்படுவது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதன்மையான நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் யாரும் அப்பகுதியிலிருந்து வெளியே வரமுடியாது என்பதுதான் தற்போதுள்ள நடைமுறை.

உ.பியைச் சேர்ந்த நகரமான நொய்டாவில் பிரிவு 28 இல் உள்ள கோவிட் 19 ஹாட்ஸ்பாட்டாக கருதப்படும் 'வருண் விஹார் என்க்ளேவ் குடியிருப்பு வளாகம்' தற்போது மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சில மருத்துவர்கள் வழக்கமாக இன்று காலை பணிக்கு செல்ல முற்படுகையில் அவர்கள் வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

இதுகுறித்து டெல்லியின் சரிதா விஹாரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் நிதின் கோங்கே, ஏஎன்ஐ.யிடம் கூறுகையில், ''மருத்துவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், ஆனால் நாங்கள் எங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சுகாதார சேவை வழங்குநர்களை இது கட்டுப்படுத்தாது, அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படு வார்கள் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது'' என்றார்.

நொய்டாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சஞ்சிதா துபே கூறியதாவது:

''நாங்கள் கரோனா சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும், குடியுரிமை நலச் சங்கம் சமூகத்திற்கு சீல் வைத்து, சாவி காவல்துறையிடம் இருப்பதாகக் கூறுகிறது.

உண்மையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உத்தரவு என்னவென்றால், மருத்துவர்கள் உள்ளிட்ட அவசரகால சேவை வழங்குநர்கள் சீல் வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கூட செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதுதான்.

ஆனால் குடியிருப்பு நலச் சங்கம் அதை சீல் வைத்தது, அவர்கள் கேட் சாவிகள் காவல்துறை வசம் உள்ளதாக கூறுகிறார்கள். நாங்கள் 112 உ.பி.க்கு (போலீஸ் அவசர எண்) அழைப்பு விடுத்துள்ளோம், ஆனால் எங்கள் அழைப்புகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை ''

இவ்வாறு டாக்டர் சஞ்சிதா துபே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT