கரோனா வைரஸ் அச்சுறுத்தலுடன் இந்தியா போரிடும் நேரத்தில், எல்லைகளை மட்டுமல்ல; ஏழை மக்களையும் காப்போம் என்று ராணுவ வீரர்கள் லடாக்கில் உணவுப் பொட்டலங்களை விநியோகித்து வருகின்றனர். ஏப்ரல் 14 வரை இது தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லடாக்கில் இதுவரை 14 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மணிநேரத்திற்குள் 540 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 17 புதிய இறப்புகள் பதிவாகிய பின்னர் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய லாக் டவுன் கடைப்பிடிக்கப்படும் காலத்தில் எல்லையோர லடாக் மக்கள் மிகவும் அவதியுற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்ட ராணுவ வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், குடிமக்களின் அத்தியாவசியத் தேவைகளை எளிதாக்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை ட்விட்டரில் கூறுகையில், ''லடாக் பிராந்தியத்தில் உள்ள ஏழைகளுக்கு சமைத்துத் தயாரிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை ராணுவத்தினர் விநியோகித்து வருகின்றனர். எல்லையோரம் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குறிப்பாக லடாக்கில் உள்ள ஏழைகளுக்கு உதவுவது ராணுவத்தின் ஒரு கடமையே.
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தொடரத் திட்டமிடப்பட்டுள்ள நாடு தழுவிய லாக் டவுன் வரையில் இந்த உணவு விநியோகிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.