இந்தியா

பிரதமர் கிராமப்புற சாலை திட்டத்தில் புதிய உத்தரவு: எம்.பி.க்கள் சான்றளித்த பின்னரே அரசு அனுமதி கிடைக்கும்

செய்திப்பிரிவு

பிரதமர் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு, சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் சான்றளித்தால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் தங்களை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் புகார் கூறியதை அடுத்து மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது.

‘பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா’ என்று அழைக்கப்படும் பிரதமர் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்படி மத்திய அரசின் நிதியுதவியுடன் பல மாநிலங்களில் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட தொகுதி எம்.பி.க்களை மாநில அரசுகள் கலந்து ஆலோசிக்காமல் அங்கு சாலைகள் அமைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தொகுதிவாசிகளின் தேவைகளை தங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை, சாலைப் பணிகள் தொடர்பாக தங்கள் விருப்பங்களை தெரிவிக்க முடியவில்லை என்று மக்களவை உறுப்பினர்கள் பலரும் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

சாலைப் பணி மட்டுமின்றி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் போதும் மாநில அரசுகள் தங்களிடம் கலந்து பேசுவதில்லை எனவும் எம்.பி.க்கள் புகார் கூறினர். இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடைய துறைகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி, மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை இயக்குநர்களில் ஒருவரான பி.மனோஜ்குமார் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “சம்பந்தப்பட்ட பகுதி மக்களவை உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் மட்டுமின்றி, பணி நடைபெறும் மாவட்டங்களை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களையும் இந்த ஆலோசனையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் இந்த திட்டத்தில் எம்.பி.யின் பங்கும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழ்களும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் திட்ட அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினர்கள் தங்கள் மாநில அரசுகள் மீது புகார் அளித்துள்ளது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2011-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பல எ.ம்.பிக்கள் இதுபோல் புகார் அளித்திருந்தனர். இதை கவனத்தில் கொண்ட அப்போதைய மத்திய அரசு, எம்.பி.க்களை கலந்து ஆலோசிப்பதுடன் அரசு விழாக்களுக்கு அவர்களும் அழைக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

மேலும், “சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் அளித்த ஆலோசனை ஏற்கப்பட்டதா? இல்லையா? என மாநில அரசு அவர்களுக்கு தெரிவிப்பதுடன், அடிக்கல் நாட்டு விழா புகைப்படங்களில் எம்.பி.க்களும் இடம்பெற வைப்பது அவசியம்” என்றும் கூறியிருந்தது.

இதுபோன்ற புகார்கள் வழக்கமாக மத்தியில் ஆளும் கூட்டணியின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எழுகிறது. ஒரே கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்போது இதுபோன்ற புகார்கள் பெரும்பாலும் வருவதில்லை.

SCROLL FOR NEXT