குழந்தைகளை துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாத்திட அரசு ஏற்படுத்தியுள்ள ஹெல்ப்லைன் எண்ணில்(1098) கடந்த 11 நாட்களில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள்வந்துள்ளன. இது, இந்த ஊரடங்கு பல பெண்களுக்கு மட்டுமின்றி, வீட்டிலேயே துஷ்பிரயோகம் செய்பவர்களுடன் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு பிரச்சினைகளை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
இதுதொடர்பாக சைல்டு லைன் இந்தியா துணை இயக்குநர் ஹர்லீன் வாலியா கூறும்போது, “கடந்த மார்ச் 20 முதல் 31 வரை குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் எண்ணுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் 3.07 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. மார்ச் 24ல் பிரதமர் அறிவித்த ஊரடங்குக்கு பிறகு இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகள் 50 சதவீதம் அதிகரித்தன. ஊரடங்கை தொடர்ந்து வந்த பிற அழைப்புகளில் உடல்நலக்குறைவு (11%), குழந்தைத் தொழிலாளர்கள் (8%), குழந்தைகள் காணாமல்போனது மற்றும் வீட்டை விட்டு ஓடியது (8%), வீடற்ற குழந்தைகள் (5%) தொடர்பானவை ஆகும். இவை தவிர 1,677 அழைப்புகள் கரோனா வைரஸ் தொடர்பான கேள்விகள், 237 அழைப்புகள் பிறருக்கு மருத்துவ உதவி கோரி வந்தவை ஆகும்” என்றார்.
டெல்லியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருக்கான பயிலரங்கு நேற்று முன்தினம் நடபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹர்லீன் வாலியா இந்த புள்ளி விவரத்தை பகிர்ந்துகொண்டார்.