இந்தியா

மலிவு விலையில் உணவு வழங்கும் நாடாளுமன்ற கேன்டீன் சர்ச்சையை எழுப்பி எம்.பி.க்களின் மரியாதையை கெடுக்க சதி: சமாஜ்வாதி எம்.பி. குற்றச்சாட்டு

பிடிஐ

‘‘நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் வசதி படைத்த எம்.பி.க்களுக்கு மலிவு விலை உணவு வழங்குவது ஏன் என்று கூறி சர்ச்சையை சிலர் கிளப்பி உள்ளனர். இது திட்டமிட்ட சதி’’ என்று சமாஜ்வாதி எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் கேன்டீன் உள்ளது. இங்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் இங்கு சாப்பிடு கின்றனர். இந்நிலையில், மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கியதால், 2013-14-ம் ஆண்டு அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, வசதிப்படைத்த எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவது ஏன் என்று சிலர் சர்ச்சையை எழுப்பினர். கேன்டீனை மூடி விடலாம் என்று சிலர் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில் கேன்டீன் சர்ச்சையை எழுப்பியது திட்டமிட்ட சதி என்று சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால், நாடாளுமன்ற கேன்டீன் பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் கூறுகையில், ‘‘எம்.பி.க்களை களங்கப்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீன் விவகாரத்தை சிலர் எழுப்புகின்றனர். உண்மையில் எத்தனை எம்.பி.க்கள் கேன்டீன் உண வருந்துகின்றனர். நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாப்பு வீரர்கள், பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் கேன்டீனில் சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண் டும். எம்.பி.க்களின் பெயரை கெடுக் கும் வகையில் சதி நடப்பதை நாங் கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று வலியுறுத்தினார்.

அவரது கருத்தை ஆமோதித்த தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘இது மிகவும் முக்கியமான பிரச்சினை. இதில் நாடாளுமன்றத்தின் கவுரவம் அடங்கி உள்ளது’’ என்றார்.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘‘இந்தப் பிரச் சினை குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறும்போது, ‘‘விவாதம் நடத்த உறுப்பினர்கள் தீர்மானம் கொடுக்க வேண்டும். இதுவரை எந்த தீர்மான மும் கொடுக்காததால், கேன்டீன் விவகாரம் குறித்து இப்போதைக்கு விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது’’ என்றார்.

SCROLL FOR NEXT