புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் விருந்தினர்கள் என்று பெருமிதத்துடன் கூறிய ஒடிசா அரசு, 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்குத் தங்குமிடம், உணவு அளித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர். திரும்ப இயலாதவர்கள் பெருநகரங்களிலேயே சிக்கிக்கொண்டனர். சிலர் நடந்தே ஊர் திரும்பினர்.
லாக் டவுன் ஏற்பட்டுள்ளதால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் ஒடிசா தொழிலாளர்களுக்கு உதவுமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரியிருந்தார். மற்ற மாநில முதல்வர்களுக்கு நவீன் பட்நாயக் எழுதிய கடிதத்தில், ஒடிசாவில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஒடிசா அரசு ஏற்கும் என்று உறுதியளித்திருந்தார்.
வெவ்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வருமாறு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒடிசா சங்கங்களுக்கும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிப்பதாகவும், நாடு தழுவிய லாக் டவுனால் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குத் திரும்ப முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒடிசாவில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம், பிஹார், ஹரியாணா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து மாநில செய்தித் தொடர்பாளர் சுப்ரோடோ பாக்சி கூறியதாவது:
''இதுபோன்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 56,926 பேருக்கு 1,882 முகாம்களின் மூலம் உணவு மற்றும் தங்குமிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல. எங்கள் விருந்தினர் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த விருந்தினர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களுக்கு மருத்துவர்கள் தவறாமல் வருகை தருகின்றனர்.
உணவு மற்றும் தங்குமிடங்களைத் தவிர, மாநில அரசு முகாம்களில் உளவியல் மற்றம் சமூக ஆலோசனைகளையும், மொபைல் சுகாதாரப் பிரிவுகள் மூலம் மருத்துவ சேவைகளையும் சில மாவட்டங்களில் விரிவுபடுத்தியுள்ளது. எங்கள் விருந்தினர் தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் குழந்தைகளுக்கான பழங்கள் மற்றும் பால் ஆகியவை வழங்கப்படுகின்றன.
மாநிலத்தில் உதவி தேவைப்படும் விருந்தினர் தொழிலாளர்களுக்காக ஒடிசா அரசு கால் சென்டரை (ஷ்ராமிக் சஹாயாதா) - 18003456703 திறந்துள்ளது.
இது தவிர, 5,268 கிராமப் பஞ்சாயத்துகளில் மொத்தம் 3,25,683 ஆதரவற்ற மற்றும் உதவியற்ற நபர்களும், ஒடிசாவிற்குள் உள்ள 108 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (யுஎல்பி) 27,058 பேருக்கும் லாக் டவுன் காலத்தில் உணவு வழங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு சுப்ரோடோ பாக்சி தெரிவித்துள்ளார்.