கரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பிரச்சினையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளதாலும் காற்று மாசு அதிக அளவில் குறைந்துள்ளது
டெல்லியில் ஊரடங்கு காரணமாக சில நாட்களாக தொடா்ந்து காற்றின்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காற்று மாசுக்கு முக்கிய காரணமான பிஎம்.25, பிஎம் 10,என்ஓஎக்ஸ் ஆகிய காரணிகள்காற்றில் மிகவும் குறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது.
கங்கை, யமுனை ஆறுகளின் கரைகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து பெருமளவு கழிவுகள் ஆறுகளில் திறந்து விட்பபடுவது வாடிக்கை. இதனால் ஆறுகள் பெருமளவில் மோசடைந்து வந்தன.
தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் இருந்து கழிவுகள் வெளியேறி ஆற்றில் கலப்பது முற்றிலும் நின்றுபோனது. இதனால் கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுபோலவே மற்ற ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரின் தரமும் மேம்பட்டு வருகிறது.