ப.சிதம்பரம் : கோப்புப்படம் 
இந்தியா

லாக்-டவுன் காலத்தில் ஏழைகள் கைகளில் பணத்தைக் கொடுங்கள்: மத்திய அரசின் அலட்சியம் குறித்து ப.சிதம்பரம் சாடல்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள லாக்-டவுன் காலத்தில் ஏழைகளின் கைகளில் பணத்தைக் கொடுங்கள். அவர்களைப் போதுமான அளவுக்குக் கவனிக்காமல், மத்திய அரசு கொடூரமாகப் புறந்தள்ளுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும் 149 உயிர்கள் பலியாகியுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.

இந்த லாக்-டவுன் காலத்தில் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் போன்றோர் வருமானமில்லாமல் சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் கைகளில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முன்பே மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரம் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''லாக்-டவுனால் வேலையின்மை 23 சதவீதமானதுடன், ஏழைகளின் நாள் வருமானம், கூலியும் கிடைக்காமல் நின்றுவிட்டது. அவர்களுக்கு வருமானத்துக்கு வழியில்லை. ஆதலால், உடனடியாக மத்திய அரசு ஏழைகள், கூலித் தொழிலாளிகள் கைகளில் பணத்தை வழங்க வேண்டும். கவனக் குறைவாகவும், கொடூரமான புறக்கணிப்பு அணுகுமுறையும் ஏழைகளுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும்.

கரோனா வைரஸைத் தடுக்க நாட்டில் லாக்-டவுனை முதலில் பரிந்துரைத்தவர்களில் நானும் ஒருவன். ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் லாக்டவுனை நீக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிப்பது வரவேற்புக்குரியது.

கேள்விக்கான பதில்கள் தனிப்பட்டதாகவோ அல்லது துறைசார்ந்த நலன்களாகவோ இருக்க முடியாது. இரு விஷயங்கள் அடிப்படையில் பதில் தீர்மானிக்கப்பட வேண்டும். கரோனா பாசிட்டிவ் நபர்கள் நாள்தோறும் அதிகரிப்பு மற்றும் அதிகரிப்பு விகிதம் இதை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். இன்றுள்ள நிலைமையில் இரு எண்களையும் வைத்துப்பார்த்தால், எச்சரிக்கையாகவும், இடர் இல்லாத அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த லாக்-டவுன் காலத்தில் செய்யாமல் தவிர்க்கும் செயல் என்னவென்றால், ஏழைகள் கைகளில் பணத்தைக் கொடுக்காமல் இருப்பதுதான். பல்வேறு தரப்பில் உள்ள ஏழை மக்களும் அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் இருக்கிறார்கள்''.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT