நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உட்பட 9 பேர் மீது நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.
மது கோடாவுடன் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலர் ஏ.கே.பாசு, அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, பிபின் பிஹாரி சிங், 'வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் (விசுல்)' நிறுவனம், அதன் இயக்குநர் வைபவ் துல்சியான், கோடாவின் நண்பர் விஜய் ஜோஷி மற்றும் கணக்குத் தணிக்கையாளர் நவீன் குமார் துல்சியான் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் கோடா, குப்தா, பாசு, சிங் மற்றும் பட்டாச்சார்யா ஆகியோர் மீது, ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் வடக்கு ரஜாராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை 'விசுல்' நிறுவனத்துக்கு ஒதுக்கியது தொடர்பானதாகும்.
'விசுல்' நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கும்படி ஜார்க்கண்ட் அரசும், மத்திய உருக்கு அமைச்சகமும் அனுமதி அளிக்காதபோது, மேற்கண்ட நிறுவனத்துக்கு சுரங்கம் ஒதுக்கப்பட்டிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.