உத்தரப்பிரதேச மாநிலம் கமல்பூர் கிராமத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 12 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் உயரதிகாரி ராகேஷ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“ரேஷன் பொருட்கள் விநியோகத்தின் போது இரு பிரிவினர்கள் மோதிக்கொண்டனர் இதில் காயமடைந்த 12 பேர் மாவட்ட மல்ஹாம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர், கிராமத்தில் தற்போது சூழ்நிலை முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 150 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் 100 பேர் பெயர் தெரியாதவர்கள். வன்முறைக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் கிராமத்தலவிஅர் சமன் கான் என்பவரும் ஒருவர்.
இதே போன்ற ரேஷன் பொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தகராறில் பாஜக-வைச் சேர்ந்த விரேந்திர சிங் என்பவர் கைது செய்யப்பட்டார், இவர் கன்னையா லா என்ற தொழிலாளரைத் தாக்கியதாக புகார் எழுந்ததால் கைது செய்யப்பட்டார்.
பாஜக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து மூத்த பாஜக தலைவர்கள் குவார்சி காவல்நிலையத்துக்கு விரைந்து வந்து காவல் நிலைய அதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் காரசார விவாதம் மேற்கொண்டு கடைசியில் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
மூத்த போலீஸ் அதிகாரி முனிராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.