இந்தியா

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு

செய்திப்பிரிவு

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்க வேண்டும் என்று மூத்த அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதாகவும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான ஆய்வு நடத்தினார். இதுகுறித்து உள்துறை இணை செயலாளர் சாலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலையும் கள்ள சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதையும் தடுக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசுஅதிகாரிகள், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் சரக்கு ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. விமானங்கள் மூலம் 200 டன் சரக்குகள் பல்வேறு நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. இதேபோல 4.57 லட்சம் ரயில் வேகன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து தரப்பு மக்களும் சமூக விலகலை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT