பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் : படம் |ஏஎன்ஐ. 
இந்தியா

21 நாட்கள் லாக்-டவுன் பற்றி என்ன முடிவு? ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அவரின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்தது. ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே நடமாடவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் 14-ம் தேதியுடன் 21நாட்கள் ஊரடங்கு முடிகிறது. அதற்குப் பின் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது முடித்துக்கொள்ளப்படுமா என்பது குறித்து ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரின் இல்லத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தற்போது மத்திய அரசு முன் இரு முக்கிய வாய்ப்புகள் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்வதா, அல்லது வாழ்வதாரத்தை தியாகம் செய்வதா என்பதாகும். கரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு விலக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

அதேசமயம் விளிம்பு நிலை மக்கள், ஏழைகள், கூலித்தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தையும், நடுத்தர குடும்பத்தினர், மாத ஊதியம் பெறுவோர் ஆகியோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுகிறது.

ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நீக்குவது குறித்தோ அல்லது நீட்டிப்பது குறித்தோ எந்த ஆலோசனையும், முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குத் தடையின்றி கிடைக்கிறதா என்பது குறித்தும், கரோனா ஹாட் ஸ்பாட் இடங்கள் எவை என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கரோனா வைரஸுக்கு நிதி தேவைக்காக எம்.பி.க்களின் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகளுக்கு இல்லை போன்ற அறிவிப்புகளை அமைச்சர்கள் வரவேற்றனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா வைரஸால் ஏற்பட்ட சூழலை எவ்வாறு கடந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு எவ்வாறு ஊக்கமளிப்பது, கரோனவுக்கு எதிராக எவ்வாறு போராடுவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களுடனும், மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்புதான் ஊரடங்கு முடிவு குறித்து அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

SCROLL FOR NEXT