இந்தியாவில் கரோனா வைரஸ் எண்ணிக்கை பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்க பல காரணங்களில் ஒரு காரணமாக டெல்லி நிஜமுதீன் தப்லிக் ஜமாத் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கும் கரோனா தொற்று இருந்தது என்பதும் ஒன்று.
இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த 8 பேர் இதே ஜமாத்தில் கலந்து கொண்டு டெல்லி விமான நிலையத்தில் இன்று மலேசியாவுக்கான விமானத்தில் புறப்பட முயன்றனர். இவர்கள் டெல்லியில் பல்வேறு இடங்களில் ஒளிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்கள் டெல்லி விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர், இவர்களை டெல்லி போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இடத்தில் ஒப்படைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவிலக்கல் குறித்து மத்திய அரசும் மாநில அரசுகளும் அவ்வபோது கடுமையாக அறிவுறுத்தி வந்த போதிலும் தப்லிக் ஜமாத் நடைபெற்று இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மதவழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 9,000 பேர்கள் பல மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள், இதனையடுத்து கரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.