காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் நடமாட்டம் தொடங்கியுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பாதுகாப்புப் படை அவர்களை தேடும் படலத்தில் இறங்கியது.
இதுகுறித்து காஷ்மீரின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
''குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹார்ட்மண்ட் குரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
இன்று தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்புப் படையினர் தேடிக் கண்டுபிடித்து சுற்றி வளைத்தபோது தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி தந்தனர். இதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொதுமக்கள் மூவரைக்கொன்ற பயங்கரவாதிகளின் அதேக் குழுவினர்தான் இவர்கள்.''
இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.