இந்தியா

செய்தித்தாள் விநியோகத்தை தடுப்பது சட்டப்படி குற்றம்: நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் கருத்து

செய்திப்பிரிவு

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக செய்தித்தாள்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அதன் விநியோகம் தொடர்ந்து தடுக்கப் பட்டு வருவது குறித்து நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நெருக்கடியான காலத்தில் நம்பத் தகுந்த தகவல்கள் தடுக்கப்படுவதுடன் இந்த செயலானது எஸ்மா (அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் குல்பூஷன் யாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்டவருமான ஹரீஷ் சால்வே கூறும்போது, “சமூக ஊடகத்தில் வதந்திகளும் பிரச்சாரங்களும் மார்க்க உபதேசம் அளவுக்கு உயர்த்தப்படுகின்றன. ஆனால் பொறுப்புமிக்க ஒரு நாளேட்டில் அச்சிடப்பட்டுள்ள வார்த்தைகள் ஒரு அத்தியாவசிய தேவையாகும். நெருக்கடியான இந்த நேரத்தில் விரக்தியோ நம்பிக்கை இழத்தலோ ஏற்படுத்தாமல் பொறுப்புமிக்க பத்திரிகையாளர்கள் தரும் செய்திக் கட்டுரையில் உள்ள தகவல்கள் நம் உயிர் வாழ்க்கைக்கு அவசியமாகும். குறிப்பாக கண்ணுக்குத்தெரியாத எதிரியுடன் போரிட்டு வரும் சூழலில் தகவல்களும் அறிவாற்றலும் மட்டுமே நமக்கு ஆயுதமாக இருக்கும் நிலையில் செய்தித்தாள்கள் மிக அவசியமாகும்” என்றார். சொலிசிட்டர் ஜெனரல்துஷார் மேத்தா கூறும்போது, “செய்தித் தாள்கள் விநியோகத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அத்தியாவசிய சேவையில் இதுசேர்க்கப்பட்டுள்ளது. எனவே எவரும் செய்தித்தாள் விநியோகத்தை தடுக்க முடியாது” என்றார்.

மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான மணீந்தர் சிங் கூறும்போது, “தகவல் பரப்புதலில் செய்தித்தாள் விநியோகம் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை மற்றும் தொழில் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவுகள் (முறையே 19(1)(ஏ) மற்றும் 19(1)(ஜி) ஆகியவை இதற்கு பாதுகாப்பு அளிக்கின்றன” என்றார்.

SCROLL FOR NEXT