மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது டட்பட்டி பக்கால் பகுதி. அங்கு கடந்த புதன்கிழமையன்று மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக மருத்துவ பணியாளர்கள் சிலரும் உடனிருந்தனர்.
திடீரென ஒரு கும்பல் மருத்துவர் குழுவை விரட்டியது. அவர்கள் மீது கற்களையும் கட்டைகளையும் வீசியது. உயிருக்கு பயந்து மருத்துவர் குழுவினர் ஓடினர். இந்த தாக்குதலில் 2 பெண் மருத்துவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு துணிச்சலுடன் தங்களது கடமையை நிறைவேற்ற தட்பட்டி பக்கால் பகுதிக்கு அதே மருத்துவக் குழுவினர் நேற்று சென்றனர். விடுபட்ட இடத்தில் இருந்து மீண்டும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனையில் ஈடுபட்டனர். அவர்களது பாதுகாப்புக்கு போலீஸாருடன் உடன் வந்தனர்.
இதுகுறித்து பெண் மருத்துவர் டாக்டர் திரிப்தி கூறுகையில், ‘‘மக்களை நோயிலிருந்து காக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை. எங்கள் கடமையைச் செய்ய வந்துள்ளோம்’’ என்றார்.
டட்பட்டி பக்கால் பகுதியைச் சேர்ந்தவரான முக்தார் மன்சூரி என்பவர் கூறுகையில், ‘‘மருத்துவர் குழுவினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியது தவறு.
திடீரென கடந்த புதன்கிழமையன்று மருத்துவர்கள் நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தி யுள்ளனர். அவர்களுக்காக நாங் கள் மன்னிப்பு கேட்கிறோம். மருத்துவர் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’’ என்றார். இதனிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.