இந்தியா

ஊரடங்கு காலத்தில் எவரும் பட்டினியால் வாடக்கூடாது: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் இணைந்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது ராம்நாத் கோவிந்த்பேசியதாவது: டெல்லி ஆனந்த்விஹார் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரளாக கூடியது, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்ளிகி ஜமாத்மாநாடு ஆகிய இரண்டும் தலைநகரில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது கவலை அளிக்கிறது.

தேசிய அளவிலான ஊரடங்கில் எவரும் பட்டினி கிடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் வீடற்றோர், வேலைவாய்ப்பற்றோர் மற்றும் நலிந்த பிரிவினரின் தேவைகள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தேவைப்படுவோருக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தும் அதேவேளையில் சமூக இடைவெளியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் எந்த சமரசத்துக்கும் இடமளிக்கக் கூடாது. நாட்டின் சில பகுதிகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் போலீஸார் தாக்கப்பட்ட சம்பவங்கள் கவலை அளிக்கிறது.

இவ்வாறு ராம்நாத் பேசினார்.

SCROLL FOR NEXT