டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. இதில் நிஜாமுதீன் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 259 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் பல்வேறு மசூதிகளில் பிரிந்து தங்கியிருப்பதாக டெல்லி சிறப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல்வேறு மசூதிகளிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 275 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58 பேர் சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள். அவர்கள் மூலம் 38 பேருக்குப் பரவியுள்ளது.
இதில் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 259 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸால் டெல்லியில் மொத்தம் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே 4 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் இறந்தார். அவர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்.
டெல்லியில் சமூகப் பரவல் இதுவரை இல்லை. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மக்களுக்கு உதவுவதற்காகவும் உணவு, தங்குமிடம் போன்றவற்றுக்காகவும் 88000 07722 என்ற வாட்ஸ் அப் எண் உருவாக்கப்பட்டுள்ளது’’.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.