கோப்புப்படம் 
இந்தியா

எஸ்பிஐ வங்கி ஊழியர்களே கவனம்: வங்கி தலைமையகம் கடும் எச்சரிக்கை

பிடிஐ

கரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கும் நேரத்தில் பணிக்கு வரக் கூறும் வங்கி நிர்வாகம் குறித்து சமூக ஊடங்களில் யாரேனும் ஊழியர்கள் விமர்சித்தால், கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டலப் பொது மேலாளர்களுக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மண்டல தலைமைப் பொது மேலாளர்களுக்கும் சமீபத்தில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவும் நேரத்தில் எஸ்பிஐ வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதற்கு ஊழியர்கள் சிலர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். அவர்களில் சிலர் சமூக ஊடகங்களில் வங்கியின் செயல்பாடு குறித்தும், கொள்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

வங்கிக்கு விடுமுறை விடாமல் செயல்படுவது குறித்து மோசமாகச் சித்தரித்து எழுதுகிறார்கள். சிலர் மட்டுமே இக்கட்டான நேரத்தில் வங்கியின் செயல்பாட்டைப் பாராட்டுகிறார்கள். வங்கியின் செயல்பாட்டை விமர்சித்து சமூக ஊடகங்களில் எழுதிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் சமூக ஊடகங்களில் வங்கி குறித்து ஊழியர்கள் விமர்சித்தால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கியில் கொல்கத்தா வட்டம் தலைமைப் பொது மேலாளர் ரஞ்சன் குமார் மிஸ்ராவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறுகையில், “வங்கிக்கென தனியாக சமூக ஊடகக்கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கையை மீறி ஊழியர்கள் நடக்கக்கூடாது. அவ்வாறு மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழியர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பு உண்டு. சமூக ஊடகங்களில் கோவிட்-19 குறித்து எழுதலாம், எது வேண்டுமானாலும் பதிவிடலாம். ஆனால், வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக இருந்தால், விதிமுறையை மீறுவதாக இருந்தால் விசாரணை நடத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி யூனியன் கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “எஸ்பிஐ வங்கியின் இந்தச் செயல் ஊழியர்களின் பேச்சு சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்குவது போன்றதாகும். ஜனநாயகத்தின் குடிமகனான ஒவ்வொருவருக்கும் கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவிக்க உரிமை உண்டு

அதேசமயம் நாம் சார்ந்திருக்கும் நிறுவனத்துக்கு எந்த அவப்பெயரும் வரக்கூடாது. அரசியலமைப்பு 19-ம் பிரிவு வழங்கியுள்ள உரிமையைப் பறிப்பதைப் போன்று சுற்றறிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT