கோப்புப்படம் 
இந்தியா

தப்லீக் ஜமாத்தின் 960 வெளிநாட்டு உறுப்பினர்களின் விசா ரத்து; அனைவரும் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு: மத்திய அரசு நடவடிக்கை

பிடிஐ

4 அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 960 வெளிநாட்டு உறுப்பினர்களின் சுற்றுலா விசாவை ரத்து செய்து, அவர்களை கருப்புப் பட்டியலி்ல் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் பல்வேறு மசூதிகளில் பிரிந்து தங்கி இருப்பதாக டெல்லி சிறப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல்வேறு மசூதிகளிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 275 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தப்லீக் ஜமாத்தில் உறுப்பினர்களாக இருக்கும் வெளிநாட்டினரின் விசாரவை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “4 அமெரிக்கர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 9 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 960 வெளிநாட்டு உறுப்பினர்களின் சுற்றுலா விசாவை ரத்து செய்து, அவர்களை கருப்புப் பட்டியலில் வைத்துள்ளோம்.

இப்போது இந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இருக்கிறார்கள். இதில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 379 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த 110 பேர், மியான்மரைச் சேர்ந்த 63 பேர், இலங்கையைச் சேர்ந்த 33 பேர் அடங்குவர்.

மேலும், கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 77 பேர், மலேசியாவைச் சேர்ந்த 75 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 65 பேர், வியட்நாமைச் சேர்ந்த 12 பேர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த 9 பேர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் ஆகியோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT