மும்பையின் தாராவி பகுதியில் அறுவை சிகிச்சை நிபுணரான 35 வயது மருத்துவர் ஒருவருக்கு பரிசோதனையில் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஊடுருவியுள்ள கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக அதிரித்துள்ளது. 157 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 56 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 338 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடர்த்தி கொண்ட 'ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி' என்று அழைக்கப்படுவது மும்பையின் தாராவியாகும். இங்கு ஏப்ரல் 1 ஆம் தேதி, சேரி மறுவாழ்வு ஆணைய கட்டிடத்தில் வசித்துவந்த 56 வயதான ஆடைக் கடை உரிமையாளருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்தான் தாராவியின் முதல் வைரஸ் நோயாளி. அன்று மாலையே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மும்பை நகராட்சி அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாராவியில் முதல் வைரஸ் நோயாளி தொற்று இருப்பது கண்டறிந்த அன்றே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த கோவிட் 19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தாராவியின் பிரதான சாலையில் கிளினிக் வைத்திருக்கும் 35 வயது மருத்துவர் ஒருவருக்கு வியாழக்கிழமை நடந்த பரிசோதனையில் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் நகரின் ஒரு முக்கிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் உள்ளார்.
கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள மருத்துவர் வசிக்கும் கட்டிடம் தனிமைப்படுத்தப்படும் மற்றும் அதிக ஆபத்துள்ள அனைத்து தொடர்புகளும் கண்டறியப்படும். மருத்துவரிடம் எந்த பயண வரலாறும் இல்லை, ஆனால் மேலதிக விவரங்கள் ஆராயப்படுகின்றன.
இதேபோல நேற்று காலை மும்பை நகராட்சி துப்புரவுப் பணியாளர் ஒருவருக்கும் கரோனா நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. வொர்லியில் வசித்துவரும் இந்த நகராட்சி துப்புரவாளர் தாராவியில் பணியமர்த்தப்பட்டார்.
தாராவியில் இதுவரை 3 பேருக்கு கோவிட் 19 நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை நகராட்சி ஏற்கெனவே இப்பகுதியில் இரண்டு பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டபோதே கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கியுள்ளது. சுற்றிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த பகுதிகளில் 2,500 க்கும் மேற்பட்ட நபர்களின் நடமாட்டத்தை தடைசெய்தது.
இவ்வாறு மும்பை மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.