கேரளத்தின் கண்ணூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது தடைபடும் என்பதற்காகத் தனது திருமணத்தையே ஒத்திவைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கண்ணூரில் உள்ள பரியரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக இருப்பவர் ஷிபா. இவருக்கும் துபாயைச் சேர்ந்த அனுஸ் முகமது என்ற தொழிலதிபருக்கும் மார்ச் 29-ம் தேதி திருமணம் நடத்த ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமானதைத் தொடர்ந்து பரியரம் மருத்துவமனையிலும் கரோனா தொற்றுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் குழுவில் ஷிபாவும் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவரது திருமணத்தை முன்வைத்து அதில் இருந்து விலக்களிக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வந்தது. ஆனால் ஷிபாவோ, தனது திருமணத்தை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டு தொடர்ந்து கரோனா வார்டில் பணியில் இருக்கிறார்.
இந்நேரம் திருமணம் முடிந்து புது வாழ்க்கையைத் தொடங்கியிருக்க வேண்டிய ஷிபா இப்போது என்95 மாஸ்க், பாதுகாக்கப்பட்ட மருத்துவ உடைகளோடு சிகிச்சைக் களத்தில் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் இந்து தமிழ் திசை இணையதளப் பிரிவிடம் கூறுகையில், “என்னோட கல்யாணம் இன்னொரு தேதிக்காக காத்திருக்கும். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருக்கும் நோயாளிகளை சாய்க்கத் துடிக்கும் கரோனா அப்படிக் காத்திருக்குமா? எனது முடிவை என் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் சொன்னார்கள்.
என் அக்காவும் மருத்துவர்தான். அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்து வருகிறார். ஒரு மருத்துவராக இப்போது நான் எனது கடமையைத்தான் செய்திருக்கிறேன். இதில் பெருமைப்பட எதுவும் இல்லை என்பதே என் பார்வை” என்றார்.
தனது தன்னலமற்ற சேவையின் மூலம் தற்போது இணையதளவாசிகளால் கொண்டாடப்படுகிறார் ஷிபா.