டெல்லியின் தப்லீக்-எ-ஜமாத்தார் நடத்திய இஸ்திமாக்களால் நாடுமுழுவதிலும் 9000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டில் கலந்துகொண்டவர் களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
டெல்லி இஸ்திமாக்களில் கலந்துகொண்டு திரும்பியவர் களை நாடு முழுவதிலும் அடை யாளம் காணும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலரும்தாமாக முன்வந்து இஸ்திமா சென்றுவந்ததை ஒப்புக்கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரிடமும் நடத்திய சோதனையில் இதுவரை தேசிய அளவில் 1,300 வெளிநாட்டினர் உட்பட சுமார் 9,000பேர் கரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளரான புண்ய சலீலா ஸ்ரீவாத்ஸவா கூறும்போது, "மர்கஸில் இருந்தவர்களில் 334 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மற்ற 1,804 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்றவர்களால் கரோனா பரவுவதைத் தடுக்க மத்திய உள்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
இதனிடையே, தப்லீக்-எ-ஜமாத் நிர்வாகிகள் 7 பேர் மீது பதிவான வழக்குகளில் விசாரணையும் தீவிரம் அடைந்துள்ளது.
தமது மர்கஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக மவுலானா சாத் (56) ஒரு குரல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் இருக்கும் இடத்தை குறிப்பிடாத அவர், தப்லீக் ஜமாத்தார் அனைவரும் கரோனா வைரஸ் மீதான மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி வேண்டியுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தாம் தனிமையில் இருப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.