பஞ்சாபில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழா ஒன்றில் கேபினட் அமைச்சர் விக்ரம் சிங் மஜிதிகா தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார்.
அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக் கலையரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு விக்ரம் சிங் தலைமை வகித்தார். அப்போது அவர் மூவண்ணக் கொடியை தவறுதலாக தலைகீழாக ஏற்றினார்.
ஆனால் கொடி தலைகீழாக பறப்பதை அறியாமல் விக்ரம் சிங், துணை ஆணையர் ரவி பகத், நகர காவல்துறை ஆணையர் ஜதீந்தர் சிங் ஆகியோர் அதற்கு வணக்கமும் செலுத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் விக்ரம் சிங் பேசும்போது, கொடி தலைகீழாகவே பறந்துகொண்டிருந்தது. விழா முடியும் தருவாயில் இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உடனே சரிசெய்யப்பட்டது.
இதுகுறித்து விக்ரம் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இத்தவறு எப்படி நிகழ்ந்தது என்று மாவட்ட நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.