இந்தியா

21 நாட்கள் ஊரடங்கு; மத்திய அரசை விமர்சிப்பதா? - சோனியா காந்திக்கு ஜே.பி. நட்டா  கண்டனம்

செய்திப்பிரிவு

இந்தியா உட்பட உலக நாடுகளே கரோனாவை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளது பொறுப்பற்ற அரசியலை காட்டுவதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் 21 நாட்கள் லாக்-டவுன் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில் ‘‘நம் தேசத்தில் ஏழைகளும், சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களும் கரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் நடைமுறைப்படுத்திவிட்டது. இதனால் ஏழைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.’’ என விமர்சித்து இருந்தார்.

சோனியா காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘இந்தியா உட்பட உலக நாடுகளே கரோனாவை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். பொறுப்பற்ற அரசியலை காட்டுகிறது. மிக மோசமான செயல். கடும் கண்டனத்துக்குரியது’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT