இந்தியா

டெல்லி மாநாட்டில் கர்நாடகாவைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொண்டிருக்கலாம் என ஐயம்: பட்டியல் அனுப்பியது மத்திய அரசு

செய்திப்பிரிவு

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் கலந்து கொண்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

இந்த மத வழிபாடு மாநாடு மார்ச் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 800 பேரை தடம் கண்டு விட்டனர். இதில் 143 பேருக்கு நோய் குறிகுணங்கள் தென்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் குடும்பநலத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜாவேத் அக்தர் மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட 1,500 பேர் பட்டியலை அரசுக்கு அனுப்பியுள்ளார். இதில் சிலர் நேரடியாக கலந்து கொண்டிருக்கலாம். மேலும் சிலர் கலந்து கொண்டவர்களுடன் தொடர்பிலிருந்திருக்கலாம்.

இதில் அயல்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்குத் திரும்பியவர்கள் எத்தனை பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டனர் என்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

“இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே முன் வந்து தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் அறிக்கை அனுப்பியுள்ளோம். இதனையடுத்து 800 பேரைத் தடம் கண்டு டெஸ்ட் செய்துள்ளோம்” என்றார் ஜாவேத் அக்தர். இவர்களின் பயண வரலாறும் கண்டுபிடிக்கப் பட்டு வருகிறது. இதனையடுத்து பிற மாநிலங்களுக்கும் தெரிவிக்க முடியும்.

இந்த மாநாட்டில் ஒருநாள் இருந்தாலும் அவர்களையும் தடம் காணும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT