ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று நேற்று ஒரே நாளில் இரட்டிப்பானது.
ஆந்திர மாநிலத்தில், கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு இந்த தொற்று பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் டெல்லியில் நிஜாமுதீன் பகுதி மசூதியில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பியவர்கள் என்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 373 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில், 330 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
நேற்று ஒரே நாளில் ஆந்திராவில் கடப்பா 15, மேற்கு கோதாவரி 13, சித்தூர் 5, பிரகாசம் 4, கிழக்கு கோதாவரி 2, நெல்லூர் 2, கிருஷ்ணா 1, விசாகப்பட்டினம் 1 என மொத்தம் 43 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் ஜெகன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பேசியதாவது: டெல்லி மத பிரார்த்தனைக்கு சென்று வந்தவர்களால்தான் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 1080 பேர் டெல்லிக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் 570 பேருக்கு இப்போது வரை நடத்திய மருத்துவ பரிசோதனையில் 70 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெகன் கூறினார்.
தெலங்கானாவில் 97 பேர்
தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கெனவே 3 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தற்போது 94 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லிக்கு மத பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களின் முகவரிகளை கண்டறிந்து அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களில் 15 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.