இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
‘‘இந்தியாவில் கரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1397 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1238 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் மரணமடைந்துள்ளனர். ’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.