டெல்லி நிஜாமுதீன் மர்காஸா கட்டடத்தில் இருந்து ஆயிரம் பேரும் வெளியேற்றப்பட்டு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்படும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்த 1034 பேரில் 334 பேர் கரோனா தொற்று பாதித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தவிர 700 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 24 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.