கரோனா வைரஸுக்கு கேரள மாநிலத்தில் இன்று 2-வது உயிரிழப்பு ஏற்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முன்னாள் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் புத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த 68 வயதான அப்துல் அஜீஸுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை என்றபோதிலும் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்து.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் அஜிஸ் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புத்தன்கோடு கவுன்சிலர் பாலமுரளி கூறுகையில், “அப்துல் அஜிஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 18-ம் தேதி முதல் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், 23-ம் தேதி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அப்துல் அஜிஸ் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் எடுக்கப்பட்ட ரத்தப்பரிசோதனயில் அப்துல் அஜிஸுக்கு நெகட்டிவாக முடிவு வந்தது. ஆனால் 2-வது முறையாக எடுக்கப்பட்ட முடிவில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களாக செயற்கை சுவாசம் தரப்பட்ட நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸுக்கு இது 2-வது உயிரிழப்பாகும், இதற்கு முன் கொச்சி அருகே சுல்லிக்கல் பகுதியைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் இதுவரை 213 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரேநளில் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கேரளாவில் வயதான தம்பதி கரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். பத்தினம்திட்டா மாவட்டம், கோட்டயத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாமஸ் (93), மரியம்மா(88) ஆகியோர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
அதேசமயம் இவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களான இத்தாலியிலிருந்து திரும்பிய இவர்களின் மகன், மருமகள், பேரன், பேத்திகள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருந்தனர். அவர்களும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்ததால், கடந்த திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.