சிவசங்கர்
தெலங்கானாவின் முதல் கரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளியான 24 வயது ஐ.டி. நிறுவன ஊழியர் முழுமையாக குணமடைந்துள்ளார். கொடிய நோயில் இருந்து மீண்டது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.
பணி நிமித்தமாக கடந்த பிப்ரவரி மத்தியில் துபாய் சென்றேன். அங்கு எப்படியோ கரோனா வைரஸ் என்னை தொற்றிக் கொண்டது. பிப்ரவரி 20-ம் தேதி விமானத்தில் பெங்களூரு திரும்பினேன். அங்கு ஒருநாள் அலுவலகத்துக்கு சென்றேன்.
பிப்ரவரி 22-ம் தேதி பெங்களூருவில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஹைதராபாத் வந்தேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. முதலில் குடும்ப மருத்துவரிடம் சிகிச்சைபெற்றேன். 4 நாட்கள் கழித்து இருமல் அதிகமானது. நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். அவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர். அதன்படி ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மார்ச் 1-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
அப்போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன். எனது பெற்றோர், நண்பர்கள், என்னோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று கவலையடைந்தேன். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் 3 நாட்கள் மூச்சுத் திணறல் இருந்தது. எனினும் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி ஆறுதலாக பேசினார். இளம் வயது என்பதால் விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்பிக்கையூட்டினார்.
இதர மருத்துவர்களும் செவிலியர்களும் எனது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தனர். அரசு மருத்துவமனை சூழல் நன்றாகவே இருந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் என்னோடு அன்பாக பேசினர். பாதுகாப்பு கவச உடையணிந்த செவிலியர்கள் எனக்கு நேரம் தவறாமல் மருந்துகளை வழங்கினர். என்னோடு சேர்ந்து தேநீர் அருந்தினர். எனது குடும்பத்தினர், நண்பர்கள் செல்போனில் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். நான் சமூக வலைதளங்களை முற்றிலுமாக புறக்கணித்தேன். முழுமையாக படிப்பிலேயே நேரத்தைக் கழித்தேன். புத்தகங்களில் மூழ்கி வேறு உலகத்துக்கு சென்றுவிட்டேன். 2 வார சிகிச்சையின்போது 6 நாவல்களை வாசித்து முடித்துவிட்டேன்.
அதற்கு பிறகு 2 முறை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் எனக்கு கரோனா வைரஸ் தொற்று நீங்கிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் 13-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். அதன்பிறகு 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்தேன். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். வைரஸ் தொற்று ஏற்படுவது யாருடைய தவறும் கிடையாது. எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் நானும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். என்னால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவியிருக்குமோ என்று கவலை அடைந்தேன்.
வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை வீட்டின் உரிமையாளர் கள் விரட்டக்கூடாது. சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து வைரஸை ஒழிக்க போரிட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து வேதனை அடையக்கூடாது. அவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளின் சூழல் நன்றாகவே உள்ளது. அங்கு தங்கியிருக்க முடியுமா என்று அச்சப்பட வேண்டாம். வீட்டில் இருப்பதைவிட மருத்துவமனை வாழ்க்கை இனிதாகவே இருந்தது. உங்கள் குடும்பம், உறவினர்கள், சமுதாயத்துக்கு வைரஸ் பரவி விடக்கூடாது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மனதின் குரல் நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மிகவும் ஆறுதலாக பேசினார். கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.