இந்தியா

உ.பி.யில் தொழிலாளர்கள் மீது பூச்சி மருந்து தெளித்ததற்கு அகிலேஷ், மாயாவதி கண்டனம்: பரேலி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் உள்ள பரேலிக்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் மீது பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதற்கு அதன் முன்னாள் முதல்வர்களான அகிலேஷ்சிங் யாதவ், மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானதை அடுத்து பரேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், ''ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மீது நடைபெறும் கொடுமைகளின் பதிவுகள் மீடியாக்களில் அதிகமாகி விட்டன. இதில், பரேலியில் சமநிலை கருதாமல் குரூரமான முறையில் பூச்சி மருந்து தெளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

இதன் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தடுக்க மாநில எல்லைகளை மூடி விடுவது நல்லது. இதனால், பசி, பட்டினியுடன் பாதசாரிகளாக தொழிலாளர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். இதை விட சிறப்பு ரயில்களிலாவது அவர்களை அனுப்பி இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதே பிரச்சினையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ்சிங் செய்த ட்வீட்டில், ''இதற்கான உத்தரவை உலக சுகாதர மையம் இட்டதா? பூச்சி மருந்தால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து என்ன? ஈரமான தொழிலாளர்களின் உடைகளுக்கு மாற்று ஏற்பாடு உண்டா? இதில் வீணான உணவு வகைக்கு பதில் என்ன?'' எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை மத்திய அரசு அறிவித்த ஊரடங்கால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதுபோல், உ.பி.யின் பரேலிக்கு இன்று காலை டெல்லி மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்களும் வீடு திரும்பினர். இவர்களுக்கு கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகப்பட்டு மருத்துவ சோதனை நடத்தவும் அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தவகையில், இன்று பரேலிக்குத் திரும்பிய தொழிலாளர்கள் மீது பரேலி நிர்வாகம் பூச்சி மருந்து தெளித்து தன் அரசு உத்தரவை தவறாகக் கையாண்டுள்ளது. அம்மாவட்டத்தின் நுழைவின் முன்பாக அனைவரும் அமர வைக்கப்பட்டு நடந்த சம்பவம் வீடியோ பதிவாக வெளியாகி வைரலானது.

இதில், அனைவரும் சாலையோரம் அமரவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன் பரேலி நகராட்சியின் பாதுகாப்பு உடை அணிந்த இரண்டு பணியாளர்கள் தம் முதுகில் பூச்சி மருந்து சிலிண்டரைச் சுமந்தபடி வந்து அதைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மீது தெளிக்கின்றனர்.

இதற்கு முன்பாக மற்றொரு அலுவலர் தன் கைகளில் ஒலிப்பெருக்கி வைத்து தொடர்ந்து ஒரு அறிவிப்பு அளிக்கிறார். அதில் அனைவரும் தம் கண்களை மூடிக்கொண்டு, திரும்பி அமர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். இவ்வாறு, ஒவ்வொரு குழுக்களாக பல நூறு தொழிலாளர்கள் மீது கரோனாவின் பெயரில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஈர உடைகளுடன் அனைவரும் தம் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சில தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் கண்கள் தொடர்ந்து எரிச்சல் அளிப்பதாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மாயாவதியும், அகிலேஷ் சிங் யாதவும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் மீது பரேலி ஆட்சியர் கன்வர்தீப் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரேலியின் தலைமை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கிய பல லட்சம் தொழிலாளர்களை அரசுப் பேருந்துகள் மூலம் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் தொழிலாளர்கள் பயணம் செய்த பேருந்துகளின் உள்ளேயும், வெளியேயும் பூச்சி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்ய பரேலி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட சில அலுவலர்கள் பேருந்துகளில் பயணித்த தொழிலாளர்கள் மீது பூச்சி மருந்துகளை தெளித்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், கரோனாவிற்கான மருத்துவப் பரிசோதனை யாருக்கும் செய்யாததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT