மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது குடும்ப உறுப்பினர்களுடன் | படம்: பிடிஐ. 
இந்தியா

சபாநாயகரின் வேண்டுகோளுக்கிணங்க கரோனா நிவாரண நிதி: 35 எம்.பி.க்கள் தலா ரூ.1 கோடி வழங்க முடிவு

செய்திப்பிரிவு

கரோனா நிவாரண நிதிக்கு 35 எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளனர்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவுகளையும் எண்ணிலடங்கா மனித பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனா ஊடுருவியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளிதான் கரோனா பரவாமல் இருக்க ஒரே வழி என்று கூறிய பிரதமர் மோடி, கடந்த வாரம் 21 நாள் லாக்-டவுனை அறிவித்தார்.

தற்போது இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,164 ஆக அதிகரித்துள்ளது. இதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பைச் சமாளிக்க உதவிடும் வகையில், நாடாளுமன்ற எம்.பி.க்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று நாடாளுமன்ற சபாசாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற சபாநயாகர் ஓம் பிர்லா, இதுகுறித்து சனிக்கிழமை அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து வருவதாகவும், பொதுப் பிரதிநிதிகள் என்ற வகையில், மக்களுடன் நிற்பது நமது கடமை" என்றும் கூறினார்.

சபாநாயகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 35 எம்.பி.க்கள் கோவிட்19-ஐ எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாய் பணம் ஒதுக்க ஒப்புதல் அளித்தனர்.

முன்னதாக, பிர்லா தனது ஒரு மாத சம்பளத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT