டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் வழி சாலையில் நூற்றுக்கணக்கானோர் முன்னேயும் போக முடியாமல், பின்னேயும் போகமுடியாமல் ஜீரோ பாயிண்ட்டில் நம்பிக்கையும் விரக்தியும் கலந்த நிலையில் குழந்தை, பெட்டி படுக்கைகளுடன் சிக்கியுள்ளனர்.
21 நாட்கள் லாக்-டவுனை அடுத்து டெல்லியில் வேலை செய்து வந்த தினக்கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட அவர்கள் உ.பி., பிஹார், ஹரியாணாவில் உள்ள சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர், பலர் நடந்தே பல கிமீ தூரம் சென்றடைகின்றனர்.
ஜீரோ பாயிண்ட் என்பது யமுனா எக்ஸ்பிரஸ் வேயின் புதுடெல்லி -ஆக்ராவை இணைக்கும் புள்ளியாகும், இங்குதான் மாநிலங்களுக்கு இடையிலான பஸ்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும்.
இந்நிலையில் அரசின் புதிய உத்தரவை அடுத்து பேருந்துகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டதையடுத்து நுற்றுக்கணக்கானோர் யமுனா நெடுஞ்சாலையில் சிக்கினர், நூற்றுக்கணக்கான பிறர் ஏதோ ட்ரக்குகள், மினி பஸ்கள் வழியாக கூரை மீது ஏறியாவது சொந்த ஊர் சென்றனர். ஆனால் மற்றும் சிலர் சாலைதான் குடியிருப்பு வாசம் என காத்துக் கிடக்கின்றனர்.
வெத்தலைப் பாக்கு கடை வைத்திருப்போர், பொட்டிக்கடை வைத்திருப்போர் எல்லாம் ஊரைக் காலி செய்து கொண்டு கிளம்பி வருகின்றனர், இதில் ஜீரோ பாயிண்ட் என்பதே நெடுந்தூரமாகும் இங்கு வந்தால் பஸ்கள் கிடைக்கும் என்று வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இதனையடுத்து மீண்டும் பல கிமீ நடந்து ஜீரோ பாயிண்டிலிருந்து டெல்லிக்கு திரும்பும் மக்களும் உள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் முறையான திட்டமிடுதல் அரசாங்கத்தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம் என்று முறையிட்டார் ஆனால் யாரும் கேட்கவில்லை.
இந்நிலையில் பேருந்துகளையும் குறைத்ததால் ஊர் நோக்கியும் போக முடியாமல் நெடுந்தூரம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலைக்கு வந்தவர்கள் திரும்பியும் டெல்லியும் வரமுடியாமல் பாதிவழியில் நெடுஞ்சாலைவாசிகளாக சிக்கியுள்ள துயரம்தான் ஏற்பட்டுள்ளது.